Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

ஆலய வரலாறு

தில்லையம்பதியாள் வரலாறு

  இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுள் கோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு குடிகொண்டு கொலுவீற்றிருக்கும் சிவகாமி அம்மையின் அருளாட்சியின் அருளால் இப்பிரதேச வாழ் மக்கள் சிறப்போடும் பெருமையோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

கோண்டாவில் தில்லையம்பதி பல வளங்களை கொண்டுள்ள ஓர் இடமாகும். நீர் வளம், நில வளம்,கற்பக தருவாக போற்றப்படும் பனை மரங்களும் , தென்னை மரங்களும் , பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைகளும் , நிறைந்த மருத நில சூழலில் அமைந்துள்ள இவ் ஆலயம் பல ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றது. பேச்சிஅம்மன் என்னும் திருநாமத்துடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள். ஆன்மாக்களை உய்வித்தற்பொருட்டே கோண்டாவில் பதியில் திருக்கோவில் கொண்டாள்.யாழ் நகரின் வடபால் மூன்று மைல் தொலைவில் இருக்கும் மாண்பான தெய்வீக மாட்சி நிறைந்த தலமான கோண்டாவில் தில்லையம்பதியில் அன்னை அருளாட்சி புரிகின்றாள்.

அன்னை பராசக்தி 1850ம் ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு சூளைகள் சூழ மாமர நிழலில் முன்னைய பெரியோர்களால் பராமரிக்க பட்டு வந்தாலும் வேலன் எனும் பெரியவராலேயே அம்பிகையின் ஆலயம் தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்பகாலத்தில் ஆலயம் ஒரு சிறு துண்டு காணியில் பெரு விருட்சமாக காணப்பட்ட ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை அன்னையின் வடிவாக உருவகப்படுத்தி ஓர் ஓலை கொட்டகையின் கீழ் நான்கு பக்கமும் அரைச்சுவர் வைக்கப்பட்டு கீழ் நிலம் சாணம் கொண்டு மெழுக்கிடப்பட்டு கோயில் முன் வாயில் கிறாதிப் படலை கொண்டு பாதுகாக்கப்பட்டது. கோயிலின் வாசலில் ஓலைக் குட்டானில் விபூதி கிடைக்கப் பெற்றது.


1855ம் ஆண்டு தொடக்கம் ஆசாரசீலரான வேலன் என்பவர் அன்னையின் ஆலயத்துக்கு விளக்கு வைத்து வழிபட தொடங்கினார். இவரது காலப்பகுதியே ஆலய வழிபாட்டின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இக்காலப் பகுதியில் தான் கருங்கல்லினால் ஆன அம்பிகையின் திருவுருவ விக்கிரகம் கோயிலில் வைக்கைப்பட்டது. சிறு முன்னேற்றங்களுடன் வளர்ச்சி பெற்று வந்த இவ் ஆலயம் 1910ம் ஆண்டு காலப் பகுதியில் மீண்டும் ஒர் புதுப் பொலிவு பெற்றது. அதாவது அம்பாளின் சிறு கொட்டகையாக இருந்த இக் கோயில் நான்கு பக்கமும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு கூரை ஓட்டினால் வேயப்பட்டு 15 அடி விஸ்தீரனம் கொண்ட ஆலயமாக உருப்பெற்றது.
இவ்வாலயத்தின் வடக்கு திசையில் இரும்பு சிலாகையில் கண்டாமணி ஒன்று ஏற்றப்பட்டது. இம் மணியோசையே இப்பகுதி மக்களின் நேர அளவீடாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1910ம் ஆண்டு காலப்பகுதியில் செய்யப்பட்ட ஒரு குதிரை வாகனமும் பஞ்சமணியும் சேமக்கலமும் சந்தனக் கிண்ணமும் மற்றும் பூசைமணியும் இன்றுவரையும் பேணிப்பாதுகாத்து வரப்படுகின்றன. தொடர்ந்து இவரது காலப்பகுதியில் வளர்ச்சி பெற்ற இவ்வலயம் 1921 ஆம் ஆண்டுவரை சென்றது.


இதற்கு பின்பு ஆலயத்தின் வளர்ச்சி மற்றும் பூசைகளை கருத்தில் கொண்டு சைவ ஆசாரத்தை பேணும் சைவப் பெரியார் சபாபதி மார்க்கண்டேயர் அவர்கள் பூசைக்காக நியமிக்கப்பட்டார் இவரது பூசை வழிபாட்டு முறைகளும் அன்னை மீது கொண்ட பக்தியும் மக்களை மென்மேலும் விழிப்படையச் செய்தது. மார்க்கண்டேயரின் பூசை முறைகளுள் மானம்பூத்திருவிழா பூசையும் அன்று இரவு நடைபெறும் வாழைவெட்டு திருவிழாவும் இன்னும் நம்மக்களால் பேசப்பட்டு வருகிறது. இவரது காலப்பகுதியில் அன்னைக்கு விசேட அமுது படைப்பதற்காக வெள்ளைப்பச்சை அரிசி பயன்படுத்தப்பட்டு வந்தது. இக் காலத்திலேயே தான் வைகாசி விசாக பட்சத்தில் ஆடு, கோழி போன்ற உயிர்ப்பலி இடுதலும் மடைபோடுதலும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 1958 வரை இவரது தொண்டு சென்றது.

1959 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதியில் முத்தன் இராசரட்ணம், பொன்னன் சுந்தரலிங்கம் இவ்வூரைச் சேர்ந்த வீரகத்தி தம்பிஐயா ஆகியோரின் பெருமனதினால் தர்மபரிபாலன சபை உருவாக்கப்பட்டு இச்சபையினால் இவ்வாலயம் பொறுப்பேற்கப்பட்டு இரண்டுகாலப் பூசை அதாவது காலை மாலை பூசை வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நித்திய பூசகராக அன்று முதல் வீ.தம்பிஐயா நியமிக்கப்பட்டார். இவர்களது முயற்சியால் ஆலயத்தில் நடைபெற்று வந்த வைகாசி விசாக பொங்கலில் இடம் பெற்ற பலியிடுதல் , மடை போடுதல் போன்ற முறைமைகள் மாற்றப்பட்டு, ஆலயத்தின் புறச்சூழலில் அமைந்திருந்த சூளைமேடுகள் அகற்றப்பட்டு ஆலயத்திற்கென ஒரு விஸ்தீரணம் கொண்ட இடம் ஒதுக்கப்பட்டது.


1962 ஆம் ஆண்டு அன்னையின் அருட்கடாட்சத்தினால் ஒன்று கூடிய மக்கள் ஆலயத்தை சிறப்பான திருப்பெரும் கோயிலாக அமைப்பதற்கு பாலஸ்தாபனம் செய்தனர். 1965 ஆம் ஆண்டு முன்னாள் யாழ் மாவட்ட நீதிபதி சே.தனபாலசிங்கம் அவர்களும் , யாழ் பொலிஸ் சுப்பிறிண்டர் திரு.வான்சன்டண் அவர்களும் வட மாகாண அரசாங்க அதிபர் திரு.ஜவன் சமர விக்கிரம அவர்களும் அஸ்திவாரக் கல் நாட்டு விழாவை முன்னின்று செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறந்த திருப்பணி வேலைகள் வெகுசிறப்பாகவும் மும்முரமாகவும் நடைபெற்றது. 1965 ஆம் ஆண்டு ஆனி மாதம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரட்டாதி நட்சத்திரத்தில் காலை 07.30 மணிக்கு கன்னிலக்கின சுபமுகூர்த்த சுபவேளையில் அம்பாளிற்கு பிரம்மஸ்ரீ குமாரசாமி குருக்கள் அவர்களால் பிரதிஷ்டா மகா கும்பபிஷேகம் நடைபெற்றது. அன்றிலிருந்து பேச்சிஅம்மன் என்னும் திருநாமத்துடன் அடியார்களுக்கு அருள் புரிந்த அன்னை பராசக்தி பிரம்மசிறி குமாரசாமி குருக்கள் மற்றும் சிற்பாச்சாரியார் ராமகிருஸ்ணா ஆச்சாரியார் அவர்களின் ஆலோசனைகளின் படி அன்னைக்கு "சிவகாமி அம்பாள் " என்னும் திருநாமம் சூட்டப்பட்டது.
1966 ஆம் ஆண்டு அம்பாளிற்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெற திருவருள் பாலித்தது. அலங்கார உற்சவத்தின் பத்தாவது நாள் பெரு வீதியான அரசடி வீதி ஊடான குமரகோட்ட வீதியால் அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். 09.07.1971 ஆம் ஆண்டு உத்தரட்டாதி நட்சத்திரத்தில் தேர்த்திருப்பணி அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ரிஷபம், பலிபீடம், கொடித்தம்பம், வசந்தமண்டபம், மணிக்கோபுரம், வைரபர், திருமஞ்சனக்கிணறு முதலான திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்பட்டு 1976ம் ஆண்டு (நளவருடம் வைகாசித்திங்கள்) 6ம் மாதம் 3ம் திகதி வியாழக்கிழமை 1வது மகோற்சவப் பெருவிழா ஆரம்பமானது.09:06:1976 புதன்கிழமை தேர்வெள்ளோட்டமும் நடைபெற்றது. மகோற்சவ காலத்தில் வேட்டைத்திருவிழாவன்று மாலை வேளையில் குதிரை வாகனத்தில் அம்பாள் ஞானபைரவர் கோயிலுக்கு சென்று வேட்டையாடுவதும் இரவு சப்பரத்திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும், வைகாசி பெளர்ணமியில் தீர்த்த திருவிழாவும் நடைபெறுவதும்  வழக்கம்.
1977 இல் அம்பாள் திருவூஞ்சல்காப்பு சுட்டிபுரத்தில் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட சிறப்பு உடையது.


திருக்கோயில் வாயிலில் தல விருட்சமாக காணப்படும் ஆலும் , அரசும் ஒன்றினைந்த அருள்மிகு பொந்தின் ஊடாக அம்பாளின் விமானதின் கலசத்தை காணக்கூடியதாகவுள்ளது. இது அற்புதமான ஒன்றாகும். அம்பாளின் மூர்த்திகரம் மேலும் பிரவாகிக்க 1982 இல் மீண்டும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு உலக இந்து மகாசபை(விஸ்வ இந்துபரிஷித்) இலங்கை இணை பிரதித்தலைவரக இருந்த திரு.யோகேந்திரா துரைச்சாமி அவர்களால் அழைத்து வரப்பட்ட வட இந்திய துறவியும் அரச அதிபரும் சேர்ந்து தைப்பூச தினத்தன்று அடிக்கல் நாட்டப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட சிறந்த சிற்பாசிரியர்களால் இரட்டை பஞ்சாங்க முறைப்படி கலையம்சம் பொருந்திய துவிதள விமான கோபுரம் அமைக்கப்பட்டது. ஈழத்தாயான சிவகாமி அம்பாள் திருவுருவத்தை நிர்மாணித்த தென்னிந்திய சிற்பவல்லுனர் திரு.பெரியசாமி ஆச்சாரியாருக்கு அம்பாளின் விக்கிரக வேலையே கடைசி வேலையாக அமைந்தது.
மூலமூர்த்தியாக சிவகாமி அம்பாள், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ  முருகப்பெருமான் , ஸ்ரீ வைரவப்பெருமான் என்பன இந்தியாவில் இருந்து 02.10.87 விஜயதசமி அன்று இங்கு வந்து சேர்ந்தன. விநாயகர் பெருமான், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ  முருகப்பெருமான், நாகதம்பிரான் ,சந்தான கோபாலர், நர்தன கணபதி ,மகேஸ்வரி, வைஷ்ணவி ,பிரமாகி, துர்க்கை, சன்டேஸ்வரி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு ஆகம முறைப்படி தனிதனி கோயில்களும் , சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ  நடராஜ பெருமானுக்கு கனகசபையும் அமைக்கப்பட்டதுடன் சிவகாமி அம்பாளின் விக்கிரகமும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டு சிவஸ்ரீ  க.குகதாச குருக்கள் தலைமையில் பங்குனி உத்தர பெளர்ணமி நிறை நாளில் அம்பாளின் அருட்கடாட்சத்தில் சிறப்புற நடைபெற்றது. அடியவர்கள் அ.சோமசுந்தரம்(தலைவர்) , த.தேவராசா(செயலாளர்) , பொ.சிவானந்தம் (பொருளாளர்) என்போரின் முயற்சி இப்பணியில் குறிப்பிடத்தக்கது.

காஞ்சிப்பெரியாரின் அருளாசியினுடனும் ஈழத்து அருளாளங்களின் நல்லாசியினுடனும் இந்தியாவின் புனித கங்கை தீர்த்தம் இம் மகா கும்பாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்பட்டது ஒரு சிறப்பாகும். இந்த நன்நாளில் அம்பாளின் திருக்கோயில் சுற்றாடலுக்கு தென்னிந்தியாவை சேர்ந்த பெரியசாமி ஆச்சாரியாரின் நல்லாசிகளுடன் "தில்லையம்பதி" எனும் திருநாமம் சூட்டப்பட்டது. தினமும் காலை,மதியம்,மாலை பூசைவழிபாடு நடைபெறவும் அம்பாளின் அருட்கடாட்சம் கிட்டியது. 1990ம் ஆண்டு திருக்கோயி வருடாந்த சங்காபிஷேக தினத்தன்று காசியிலிருந்து காசி வஸ்வநாதர்(லிங்கம்) இங்கு வரவழைக்கப்பட்டது.

1992 பங்குனி உத்தரத்தை முன்னிட்டு 10 தினங்கள் இலட்ச அர்ச்சனை ஆரம்பமாகியது. பங்குனி உத்தர சங்காபிஷேகம் மகோற்ஷவ வேட்டை திருவிழா,நவராத்திரி விஜயதசமி, மானம்பூ ஆகிய தினங்களில் அம்பாள் பளைய தெருவீதியுலா தரிசனம் பெறுவது வழக்கமாகும். 1993ம் ஆண்டு தை மாதம் காசி விசாலாட்சி விஸ்வநாதருக்கு பிரதிஸ்டாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1994ம் ஆண்டு நடைபெற்ற பங்குனி உத்தர சங்காபிஷேகத்தின் போது அம்பாளின் கடாட்சத்தினாலும் அடியார்களின் பெரும் காணிக்கையினாலும் அம்பாளுக்கு பொன்முடியும் திருக்காரணம் சூட்டு விழாவும் கொண்டாடப்பட்டது. 

கவிமாமணி ந.வீரமணி ஐயர் அவர்களால் எழுதப்பட்டு தென்னிந்திய பக்திப்பாடகர் கலைமாமணி T.M. செளந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட திருவூஞ்சல் ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு விழா மா.இலக்கணகுமார் தலைமயில் 20.05,94 வைகாசி வசந்த உற்சவத்திலன்று ஸ்ரீலஸ்ரீ  சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன் வெளியிடப்பட்டது. 10.06.1997ல் மா.இலக்கணகுமார் தலைமயில் 2வது பக்திபாமாலை ஒலிப்பதிவு நாடாவும் வெளியிடப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ சக்கரம் 10.04.98 பங்குனி உத்தர தினத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.08.05.2000ம் ஆண்டு 25வது கொடியேற்றத்தை முன்னிட்டு அடியார்களின் பெரும் காணிக்கையினால் அம்பாளுக்கு தங்ககுடை சூட்டுவிழாவும் இராஜகோபுரம் அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவமும் நடைபெற்றன.
   
தொடரும்..........